முஸ்லிம்களைக் குறிவைத்து பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு? ; மக்ரோன் கடும் கண்டனம்
பிரான்ஸில் முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (23) பாரிஸுக்கு அருகிலுள்ள யுவெலின் (Yvelines) மாவட்டத்தின் திரப்பேஸ் (Trappes) மற்றும் லா வெரியர் (La Verrière) ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “இனவாதப் பயங்கரவாதத் தாக்குதல்” எனக் கண்டித்துள்ளார்.

சந்தேகநபர் வாகனத்தில் பயணித்தபடி பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையம், மருத்துவ நிலையம் மற்றும் சிறுவர் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 12 வயதுச் சிறுமி உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த சிறுமி மீது எட்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல்நிலை சீரடைந்து நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 39 வயதுடைய கெவின் டி. (Kevin T.) என்பவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வாகனத்திலிருந்து தானியங்கித் துப்பாக்கி வகையைச் சேர்ந்த ஆயுதம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சந்தேகநபரின் வீட்டில் மூன்று எரிவாயு உருளைகள் மற்றும் மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பொறி சாதனமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவத்தின் பின்னணி தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் தோல் நிறம் அல்லது அவர்கள் சார்ந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட மதத்தின் அடிப்படையில் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளது. இனவாத அல்லது மதவெறி நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், இந்தத் தாக்குதல் பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தோல் நிறம் அல்லது மதத்தின் அடிப்படையில் மக்களைக் குறிவைத்துத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



