குவைத்தில் இரு இலங்கைப் பெண்களின் மரணத்தில் மர்மம் ; காரணத்தைக் கண்டறிய விசாரணை தீவிரம்
குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மர்மமான முறையில் மரணம்
முதலாவது சம்பவம் Ali Sabah Al-Salem பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றின் கூரைக்கு மேலுள்ள சேமிப்பு அறையில் இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் சந்தேகத்திற்கிடமான மரணமாகப் பதிவு செய்யப்பட்டதுடன், சடலத்தை சட்ட மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Al-Nahda பகுதியில் மற்றுமொரு இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும், சம்பவத்தின் பின்னணியை உறுதிப்படுத்துவதற்கும் சடலம் சட்ட மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரஜை ஒருவரிடமிருந்து அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சட்ட நடைமுறைகளை முன்னெடுப்பதற்கும் மரணங்களின் பின்னணியை ஆராய்வதற்கும் தடயவியல் நிபுணர்கள், மருத்துவப் பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு பெண்களின் மரணங்களுக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.