காட்டு யானைகளுக்காக அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி ஐந்து வயதுச் சிறுவன் உட்பட இருவர் பலி
பொலன்னறுவை, அரலகங்வில, எல்லேவெவ, தயாசிரிகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வீடொன்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி ஐந்து வயதுச் சிறுவனும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த சிறுவன், ஜா-எல, தளுகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனது குடும்பத்தினருடன் தயாசிரிகம பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் முற்றத்தில் மற்றொரு சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளார்.
இதன்போது, சிறுவனைக் காப்பாற்ற முன்வந்த வீட்டின் உரிமையாளரான 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.