பொலிஸாரின் முகநூல் பதிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்று (22) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
“வாயைத் திறப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள்” (Think twice before you open your mouth) என்ற தலைப்பில் இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘மாற்றத்துக்கான இளைஞர்கள்’ (Youth for Change) அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் குறித்த விடயத்தைக் கொண்டுசென்றுள்ளனர்.
இந்த முறைப்பாட்டை, அவ்வமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி மகவித்த, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பதிவின் மொழிநடை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு முறையீடு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.