FIFA தரவரிசையில் இலங்கையின் முன்னேற்றம் ; AFC தலைவர் பாராட்டு
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி அண்மைக்காலமாக அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா பாராட்டியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற AFC விசேட மாநாட்டுக்கு இணையாக, AFC தலைவர் மற்றும் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
FIFA உலகத் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை, பிராந்திய கால்பந்தாட்டத் துறையில் நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் எடுத்துக்காட்டுவதாக AFC தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்காக AFC தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு ஜஸ்வர் உமர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நாட்டின் கால்பந்தாட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேசத் தரத்திலான இரண்டு புதிய கால்பந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஆதரவை வழங்கியமைக்காக அவர் AFC-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நிதியுதவிக்கு மேலதிகமாக, அடிமட்ட கால்பந்தாட்ட வளர்ச்சி முதல் உயர் செயல்திறன் கொண்ட போட்டிகள் வரை பல்வேறு துறைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் AFC வழங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜஸ்வர் உமரின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை கால்பந்தாட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அணியின் சர்வதேசப் போட்டித் திறன், FIFA தரவரிசையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உள்நாட்டுப் போட்டிகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு ஆகியவை இதனைப் பிரதிபலிப்பதாகக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.