சமூக வலைத்தளங்களில் போலிப் பரிசுச் செய்திகள் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வப் போயாதினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி வங்கி ஒன்று சிறப்புப் பரிசுகளை வழங்கவுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட வங்கியினால் இவ்வாறான எந்தவொரு சிறப்புப் பரிசுத் திட்டமும் அறிவிக்கப்படவோ அல்லது ஆரம்பிக்கப்படவோ இல்லை என இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனிப்பட்ட தகவல்கள், வங்கி தொடர்பான கணக்கு விவரங்கள் மற்றும் பிற உணர்திறன் மிக்க தரவுகளைத் திருடும் நோக்கில், திட்டமிட்டுப் பரப்பப்படும் ஒரு மோசடியே இதுவெனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மோசடியில் சிக்குபவர்களின் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் ஊடுருவப்பட்டு, நிதி இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே, குறித்த போலிச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு இணைய இணைப்புகளையும் (Links) சொடுக்கவோ அல்லது சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள் ஊடாகத் தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களை வழங்கவோ வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சலுகைகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பான தகவல்களை, வங்கியின் உத்தியோகபூர்வத் தொடர்பாடல் வழிகளினூடாக மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.