திரை பிரபலங்களை குறிவைத்து தொடரும் மோசடிகள் ; கடும் எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்
சமீப காலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் அந்நிறுவனம் பெயரில் போலியாக வெளியிடப்படும் அறிவிப்பு மற்றும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
அதேபோல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக வெளிவரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு விளம்பரதாரர்களையும் நாங்கள் நியமிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.