நாடாளுமன்றில் கண்ணீர் சிந்திய எம்.பி. அர்ச்சுனா
நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது தந்தை காணாமல் போனமை தொடர்பில் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்.
விடுதலைப்புலிகள் காவல்துறையில் பணியாற்றிய தனது தந்தை காணாமல் போனது குறித்து தான் சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு அளித்தும், சாட்சியமளித்தும் எந்தப் பலனும் இல்லை என்று தெரிவித்தார்.

அவருக்கு என்ன நடந்தது இன்று என்னால் அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்று உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்ட அவர், சிங்களம் பேசக் கற்றுக்கொடுத்தது தன் தந்தைதான் என்று நினைவு கூர்ந்தார்.
மேலும், சேவை செய்ய முற்பட்டதற்காகவும், வைத்தியசாலைக் குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காகவும் தான் கைது செய்யப்பட்டுச் சிறையிலிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், மன்னார் வைத்தியசாலையில் இரவில் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவது என்பது பெயர்ப்பலகைகளை மாற்றுவதால் நடக்காது என்றும், அதற்கு மேலதிகமாக மருத்துவர்கள், தாதிகள் போன்ற மனிதவளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சுகாதார முறைமை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.