வங்கி நடைமுறைகள் புரியாமல் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ; சகோதரியின் என்புக்கூட்டுடன் வந்த அண்ணன்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தைப் பெறுவதற்காக, அவரது என்புக்கூட்டை வங்கிக்கு எடுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கேந்துஜார் மாவட்டம், மாலிபோசி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான பழங்குடியின நபர் ஜீது முண்டா என்பவரே இவ்வாறு செய்துள்ளார்.
அவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா கடந்த ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 20,000 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக ஜீது முண்டா பலமுறை வங்கியை அணுகியிருந்தார்.

எனினும், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வருமாறு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
சகோதரி இறந்துவிட்டதாக பலமுறை விளக்கமளித்த போதிலும், அதனை ஏற்காத அதிகாரிகள், அவரை நேரில் அழைத்து வருமாறு வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ஜீது முண்டா, தனது சகோதரியின் மரணத்தை நிரூபிப்பதற்காக கல்லறையைத் தோண்டி, அவரது என்புக்கூட்டை எடுத்துச் சென்று வங்கியில் சமர்ப்பித்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இடத்திற்கு வந்து என்புக்கூட்டை மீட்டு, அதை மீண்டும் முறையாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், ஜீது முண்டா எழுத்தறிவற்ற பழங்குடியின நபராக இருப்பதால், உயிரிழந்தவரின் பணத்தைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து அவருக்கு போதுமான விளக்கம் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், அவருக்கு உரிய சட்ட நடைமுறைகள் மூலம் சகோதரியின் பணத்தைப் பெற உதவ நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.