இலங்கையின் எதிர்காலத்திற்கு சவால் ; 25 சதவீத சிறுவர்கள் மந்தபோஷணையால் பாதிப்பு
இலங்கையில் கல்வியறிவு விகிதம் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தபோதிலும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் சுமார் 25 சதவீதமானோர் மந்தபோஷணையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் சமூக சுகாதார விசேட மருத்துவ நிபுணர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தொழில்முறை விரிவுரையாளர்கள் அறக்கட்டளையின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மந்தபோஷணை
மந்தபோஷணை நிலைமை காரணமாக, பாடசாலைக் கல்வியைத் தொடரும் மாணவர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் (1ஃ4) தங்களின் கல்வி இலக்குகளை அடைய முடியாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முறையான போஷணை இன்மை மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கருவிலிருந்தே முறையான போஷணை கிடைக்காமையானது, பிள்ளையின் அறிவு வளர்ச்சி குன்றுவதற்கு நேரடி காரணமாக அமைகிறது.
நாம் எவ்வளவுதான் சிறந்த கல்வியை வழங்கினாலும், போஷணைக் குறைபாட்டால் ஏற்படும் அறிவுசார் குறைபாட்டினால் இச்சிறுவர்களை முன்னேற்றுவது கடினமாக உள்ளது.
கடந்த ஆண்டு தரவுகளின்படி, நாட்டின் சிறுவர்களில் கணிசமானோர் ஏற்கனவே மந்தபோஷணைக்கு ஆளாகியுள்ளனர்.
"போஷணைக் குறைபாடு என்பது அறிவுசார் குறைபாடாகும்" என மருத்துவர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
சமூக, பொருளாதார மற்றும் உயிரியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள இச்சிறுவர்களை நாட்டுக்கு பயனுள்ள பிரஜைகளாக மாற்றுவதற்கு, இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகத் தீர்வுகளைக் காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒழுக்கமான மற்றும் கற்றறிந்த ஒரு பிள்ளையை உருவாக்குவதற்கு நிலவும் இந்தப் போஷணைப் பிரச்சினை ஒரு பிரதான தடையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழில்முறை விரிவுரையாளர்கள் மன்றத்தின் தலைவர் கோசல கமகே மற்றும் செயலாளர் நவீன் திலகரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.