இலங்கைக்கு இன்னொரு தோல்வி ; பாகிஸ்தான் 7 விக்கெட்டால் வெற்றி
முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் இன்றைய (22) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - ராவல்பிண்டியில் இந்தப் போட்டி இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், குசல் பெரேரா 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடியது. அதற்கமைய 15.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Sahibzada Farhan 80 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும் தசுன் சானக்க ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரின் புள்ளிப்பட்டியலின் படி இதுவரை 2 வெற்றிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.
ஒரு வெற்றியை பெற்றுள்ள சிம்பாப்வே அணி இரண்டாம் இடத்திலும், எந்தவொரு வெற்றியையும் பெறாத இலங்கை அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மாத்திரமே இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.