சமூக ஊடகத்தில் பரவிய காணொளி ; 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக மற்றுமொரு 16 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏறாவூர் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணைகளின் படி, ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் இளம் வயதினரைக் கொண்ட குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன.

அந்த பின்னணியில், பழிவாங்கும் நோக்கில் வீதியில் தனியாகச் சென்ற சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.