ரூ.161 இலட்சம் பெறுமதியான 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் ; அளவீட்டு பணிகள் நிறைவு
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த தகவலை நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த தங்க ஆபரணங்களின் மொத்த பெறுமதி சுமார் 161 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆபரணங்கள் தற்போது இலங்கை மத்திய வங்கி பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
10,000க்கும் அதிகமான தங்க ஆபரணங்களை அளவீடு செய்து முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தங்க ஆபரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
முன்னதாக, விடுதலைப்புலிகள் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து மீட்கப்பட்ட இந்த தங்க ஆபரணங்கள் தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் இருந்தன.
அவற்றை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைத்து பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்குத் தவணையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு மற்றும் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.