தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 'தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)' இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, கடந்த மே மாதம் 4ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, 2030ஆம் ஆண்டுக்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
இலங்கையை உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மை மிக்க விநியோகச் சங்கிலி மற்றும் அறிவுசார் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கில், இந்தத் திட்டம் இரண்டு முக்கிய தூண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை அதிகரிப்பதற்காக மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், கனிம மற்றும் இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள், மசாலாப் பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள், மின் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட எட்டு முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருவாயை உயர்த்துவதோடு, புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.