எரிபொருள் விலை குறையுமா? மக்களுக்கு நம்பிக்கை அளித்த அரசாங்கம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எரிபொருள் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் உலக எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்னும் இறுதி உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றும், தற்போதும் ஒருவித நிச்சயமற்ற சூழ்நிலை நீடித்து வருவதாகவும் கூறினார். இதனால் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் குறிப்பிட்ட காலக்கெடுவை இப்போது அறிவிக்க முடியாது என்றும் விளக்கமளித்தார்.

“இந்த மாதத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளன. மேலும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மாத்திரமே வரவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.
அந்த உடன்படிக்கை நிறைவேறிய பின்னர் உலக பொருளாதார சூழ்நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், அதன் பயன்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கும் கிடைத்தால் அவை மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஏப்ரல் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட முதற்கட்ட எரிபொருள் மானியத் திட்டத்திற்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த மானியக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தற்போது மாதத்தின் நடுப்பகுதியில் உள்ளோம். எனவே உலகச் சந்தை நிலவரங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து மாத இறுதியில் என்ன நடைபெறும் என்று முன்கூட்டியே கூறுவது பொருத்தமற்றது,” என்றும் அவர் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் நன்மைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனில் மக்களுக்கு தேவையான எரிபொருள் நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.