சிறுவர் இல்லங்களிலுள்ள 3000 சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அரவணைப்பு இல்லாதமை மற்றும் அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதமை போன்ற காரணங்களால் இந்தக் சிறுவர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நன்னடத்தை இல்லங்கள்
போதைப்பொருள் பழக்கம், திருட்டு, கொலை, திட்டமிட்ட குற்றக்கும்பல்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுவர்கள் நீதிமன்ற நடவடிக்கை மூலம் நன்னடத்தை இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இல்லங்களில் அநாதரவாக வீதியில் கைவிடப்பட்ட சிறுவர்களும் அடங்குவர். பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இந்த சிறுவர்களை முறையான பாடசாலைக் கல்வியில் இணைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இவர்கள் 18 வயதை பூர்த்தி செய்து சமூகத்துடன் இணையும் போது, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஊடாக, குழந்தைகளின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு 'உத்தேச வயது' நிர்ணயிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தாய் அல்லது தந்தையின் விபரங்கள் இல்லாத பட்சத்தில், அந்தந்த நன்னடத்தை இல்லங்கள் அமைந்துள்ள மாகாண ஆணையாளரின் பெயரை பாதுகாவலராகப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது 46 அரச நன்னடத்தை இல்லங்களிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 308 இல்லங்களிலும் மொத்தம் 9,191 சிறுவர் மற்றும் இளைஞர்கள் தங்கியுள்ளனர்.
இவர்களில் முதற்கட்டமாக 16 வயதுக்குட்பட்ட 3,000 சிறுவர்களுக்கு விரைவில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.