விடுமுறைக் காலத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்ற பெரும் வருமானம்
நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த விடுமுறைக்காலத்தில் குறிப்பாக டிசம்பர் 27 ஆம் திகதியன்று அதிகபட்சமாக 62 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.

பண்டிகை கால விடுமுறை
அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 26 அன்று 58 மில்லியன் ரூபாயும், டிசம்பர் 28 அன்று 57 மில்லியன் ரூபாயும் வருமானமாகப் பெறப்பட்டது. நத்தார் தினமான டிசம்பர் 25 அன்று 54 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவானது.
மேலும், பண்டிகை கால விடுமுறைக்கு முன்னதாக மக்கள் அதிகளவில் பயணம் செய்தமையால், டிசம்பர் 24 ஆம் திகதியன்று வருமானம் 61 மில்லியன் ரூபாயாக வலுவாகக் காணப்பட்டது.
இந்த உயர்ந்த வருமானப் புள்ளிவிபரங்கள், நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு குடும்பங்களும் சுற்றுலாப் பயணிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தமையால் அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.