பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை ; மக்களே அவதானம்
இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக டெலிகிராம், வட்ஸ்அப் மற்றும் ஏனைய ஒன்லைன் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் ஊடாக இந்த மோசடிகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாகக் கூறி விளம்பரப்படுத்துதல்.

ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்
பொருட்கள் விற்றுத் தீரப்போகின்றன அல்லது வேறு வாடிக்கையாளர்கள் வரிசையில் உள்ளனர் எனக் கூறி, நுகர்வோரை நிதானமாகச் சிந்திக்க விடாமல் அவசரப்படுத்துதல். ஒரு பொருளை உங்களுக்காக ஒதுக்கி வைப்பதாகக் கூறி, 5,000 முதல் 20,000 ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு வற்புறுத்துதல்.
போலி வேலை வாய்ப்புகள் அல்லது கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி, வங்கி விபரங்கள் மற்றும் பயனாளர் பெயர்களைத் தந்திரமாகப் பெற்றுக் கொள்ளுதல் என்பவற்றை மோசடியாளர்கள் யுக்தியாகக் கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கையில் பொருள் கிடைக்காமல் எக்காரணம் கொண்டும் முன்பணம் செலுத்தக் கூடாது.
விற்பனையாளரிடம் அந்தப் பொருள் உண்மையாகவே உள்ளதா என்பதை உறுதிப்படுத்தக் காணொளி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதன்போது விற்பனையாளரின் முகத்தையும் தெளிவாகக் காட்டுமாறு கோர வேண்டும்.
முன்பின் தெரியாத விற்பனையாளர்களைச் சந்திக்க நேரிட்டால், தனியாகச் செல்வதைத் தவிர்த்து, மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான பொது இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிற நபர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளையே மோசடியாளர்கள் பயன்படுத்துவதால், வங்கி விபரங்கள் குறித்து சந்தேகம் இருப்பின் பணத்தை வைப்புச் செய்யக் கூடாது.
பணம் அல்லது தகவல்களைப் பெற்றுக் கொண்டவுடன் மோசடியாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியாதபடி முடக்கிவிடுவார்கள் என்பதால், இத்தகைய ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.