யாழில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் ; சகாயபுரத்தில் அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் மாதகல் J/150 சகாயபுரம் கிராமத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்வதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விநியோகம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சிலரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைத்தபோதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2ஆம் திகதி இரவு சகாயபுரம் கிராமத்துக்கு இளவாலை மற்றும் கீரிமலை பகுதிகளில் இருந்து சிலர் வாள், கத்தி மற்றும் தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வருகை தந்து, வீதியை மறித்து இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல மணித்தியாலங்கள் கிராம மக்கள் அச்சத்தில் இருந்ததாகவும், பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸார் வருகை தந்தபோது மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நேற்று மீண்டும் குறித்த நபர்களின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்பட்டதாகவும், இதனால் தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழுவில் கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்படும் ஒருவரும் அவரது சகோதரரும் இருந்ததாகவும், அவர்கள் உள்ளிட்ட சிலர் ஏழு மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சகாயபுரம் கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.