சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்
ஹட்டன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தங்க ஆபரண உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று (21)திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் குறித்த உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்த திருடன், அங்கிருந்த பூட்டுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தைத் தேடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருட்டுச் சம்பவங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இயங்கும் தையல் நிலையம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த தையல் இயந்திரம் மற்றும் வெற்றுப் பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, சேலைகளை மதில் சுவரில் கட்டி, அதன் ஊடாக மூன்றாவது மாடிக்குச் சென்றே இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதே கட்டடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள இரண்டு தங்க ஆபரண உற்பத்தி நிலையங்கள் கடந்த மாதம் இதே முறையில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தன.
அதேபோன்ற சம்பவம் தற்போதும் அரங்கேறியுள்ளமை ஹட்டனில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய திருடனைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.