சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபு ; கண்ணீருடன் தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்
“என் மகன் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலை செய்ய மாட்டான்; அவனை ஏமாற்றியவன் அனுபவித்துத்தான் சாக வேண்டும்” – சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபுவின் தாய் ஷாஹிதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கண்ணூர் மாஹி பெருங்காடி பகுதியைச் சேர்ந்த அபுவுக்கு சவுதியில் போதைப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமனில் இருந்து சவுதிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இடம்பெற்ற எல்லைப் பரிசோதனையில் அபுவை சவுதி அதிகாரிகள் கைது செய்ததாக கூறப்படுகிறது.
அவர் பயணித்த வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளில் ஒன்றில் சுமார் 43 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அபு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்றும், நண்பர் ஒருவரின் ஏமாற்றத்தினாலேயே அவர் இந்த வழக்கில் சிக்கியதாகவும் அவரது தாய் ஷாஹிதா தெரிவித்துள்ளார்.
ஓமனில் அபுவின் விசா காலாவதியாகியிருந்த நிலையில், அவரது விசாவை சரிசெய்து தருவதாக நண்பர் ஒருவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் அபு வாகனத்துடன் சவுதிக்குச் செல்ல சம்மதித்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
சவுதிக்குச் சென்ற பின்னர் தாயகம் திரும்பலாம் என்றும், விசாவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், பின்னர் அந்த வாகனத்தை நண்பரே வந்து பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நம்பியே அபு வாகனத்துடன் சவுதிக்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஒரே ஆதரவாக இருந்தவன் அவன்தான். அவன் ஒருபோதும் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டான்” எனக் கூறிய அபுவின் தாய், மகனை நினைத்து கண்ணீர் மல்க கதறியுள்ளார்.
மேலும், “என் மகனுக்கு இந்த துரோகத்தை செய்தவன் அனுபவித்துத்தான் சாக வேண்டும்” என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அபு நிரபராதி என்பதை நிரூபிக்க உதவுமாறு அவரது தாய், மனைவி மற்றும் சகோதரிகள் இணைந்து சவுதியில் உள்ள இந்திய தூதரிடம் கருணை மனுவையும் சமர்ப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சவுதி சட்டத்தின்படி அபுவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.