பண்டிகை முன்னிட்டு ஹட்டன் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் நகரத்துக்கு வருகை தருபவர்கள் அங்குள்ள உணவகங்களில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்படுமாறு ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, ஹட்டனில் உள்ள சில உணவகங்களின் சமையலறை, சுகாதார பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகச் சோதனைகளின்போது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, வாடிக்கையாளர்களுக்குத் தரமற்ற உணவுப் பொருட்களை வழங்கி வந்த ஹட்டன் நகரில் உள்ள பல உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சில உணவகங்களில் தொடர்ந்தும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உணவகங்களின் முன்புறம் சுத்தமாக இருந்த போதிலும், உணவு தயாரிக்கும் சமையலறை மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் குறித்த உணவகங்களை தற்காலிகமாக மூடி, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.