யாழில் திடீர் பணக்காரர்கள் 18 பேர் பொலிஸ் விசாரணையில்
யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான சொத்துக்களைக் குவித்து திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
போதைப்பொருள் கடத்தல், மீட்டர் வட்டி மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் ஊடாகக் குறுகிய காலத்தில் பெருமளவிலான பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பாதித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் சொத்து விபரங்கள் மற்றும் அவற்றைச் சம்பாதித்த விதம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலரின் சொத்து விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தமது சொத்துக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத நபர்களின் சொத்துக்களைச் சட்ட நடவடிக்கைகளின் ஊடாகப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களைக் குவிக்கும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.