பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி? ; 43 மடிக்கணினிகள் மீட்பு
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாகப் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, பல்வேறு வழிகளில் ஏமாற்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படும் பாரிய சேவை மையம் ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 43 மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையத் தொடர்புகள் ஊடாகப் பொதுமக்களை இலக்குவைத்து, பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முன்வைத்து பணம் பறிக்கும் மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
குலுக்கல் முறையில் பரிசு வென்றுள்ளதாக அறிவித்தல், பிரபல நிறுவனமொன்றின் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுதல், பணப் பரிசுகள் மற்றும் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என உறுதியளித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.
இத்தகைய மோசடிகளினால் பலர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்புகளை இழக்கும் அபாயம் காணப்படுகின்றது. சிலர் நகைகளை அடமானம் வைத்தும், கடன் பெற்றும் பணத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் அறிமுகமில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக, பரிசு கிடைத்துள்ளதாகவோ அல்லது பணம் வழங்கப்படவுள்ளதாகவோ தெரிவித்து முன்பணமாகப் பணம் கோரினால், அவ்வாறான கோரிக்கைகளை நம்பி பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP இலக்கங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் பின்னணி, மோசடி வலையமைப்பின் செயற்பாடுகள் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பொதுமக்கள் தொடர்பான விபரங்கள் விசாரணைகளின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.