ஒரே வீட்டில் இரு மரணங்கள் ; காரணம் என்ன? தீவிர விசாரணையில் பொலிஸார்
கண்டி மாவட்டம், புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரைத் திருமணம் செய்யவிருந்த ஆண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பெண்ணின் வீட்டின் பின்பகுதியில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன், தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆண், பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் அவருடன் பழகி வந்ததுடன், இருவரும் பெண்ணின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், பெண் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரைத் திருமணம் செய்யவிருந்த ஆண் வீட்டின் பின்பகுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்த இரு சம்பவங்களுக்குமான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.