கொழும்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளைக் கோரி மாணவர்கள் போராட்டம்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் அடிப்படை வசதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியம் இன்று (04) பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது, எதிர்ப்புப் பேரணியாகச் சென்ற மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் College House முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முழுமையான வசதிகளைக் கொண்ட பீடக் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்குதல், மாணவர் விடுதி வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப உயர்கல்விப் பாடநெறிகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களில் சிறு தொகையினருக்கு மாத்திரமே விடுதி வசதிகள் கிடைப்பதாகவும், தொழில்நுட்ப பீடத்தில் அடிப்படை வசதிகள்கூட போதியளவில் இல்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கல்வி அமைச்சுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடிய போதிலும், இதுவரை எவ்வித சாதகமான தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் வரை போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் போவதாகவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.