முல்லைத்தீவில் அரங்கேறிய பயங்கரம்; பொலிஸார் குவிப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறந்த மரதனோட்ட வீரன்
நேற்று இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று (08) அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞனை துரத்தி வந்த இனந்தெரியாதோர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதிகாலை 2.30 மணியளவில் நபர் ஒருவர் தொழிலுக்கு செல்லும்போது குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.
குறித்த பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாகையால், யானை அடித்திருக்கலாம் என சென்று பார்த்த போதே இளைஞனின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் , சிறந்த மரதனோட்ட வீரன் என்றும், கடந்த காலங்களில் வடமாகாணத்தில் பல சாதனைகளை பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.