மாடலிங் ஆசையால் சீரழிந்த யுவதி; குறும் செய்தியால் ஏற்பட்ட துயரம்
முகநூல் விளம்பரம் மூலம் அறிமுகமான நபர் ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ தொலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அடுத்து, மொடலாக ஆசைப்பட்டுச் சென்ற அழகுக்கலையில் ஈடுபடும் யுவதியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் நகருக்கு அருகில் வசிக்கும் 23 வயதுடைய அழகுக்கலையில் ஈடுபடும் யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டல் அறையில் அரங்கேறிய சம்பவம்
முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் அந்த யுவதியை தொடர்பு கொண்டு, ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக வும், யுவதி மொடலாக செயற்பட விரும்பினால், நிறுவன மேலாளர் யுவதியை சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிச் சென்ற யுவதியை, அநுராதபுரம் திஹியாகம சந்தியில் இருந்து மல்வத்து ஓயாவை அண்மித்த ஹோட்டலுக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற சந்தேகநபர், ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.