இலங்கையில் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் போட்டி
ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் T20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி இலங்கையின் தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப் போட்டி 2024 ஜூலை 19ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
ஆசியாவில் மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகரித்துவருவதன் பலனாக இம்முறை எட்டு அணிகள் இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்தது.
கடைசியாக 2022இல் நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 அணிகள் பங்குபற்றி இருந்தன.
இந்த வருட மகளிர் T20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மகளிர் பிறீமியர் லீக் 2024 அரை இறுதிகளில் விளையாடிய ஐக்கிய அரபு இராச்சியம், மலேசியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பங்குற்றவுள்ளன.
பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் பிராந்தியத்தில் போட்டித்தன்மையும் கிரிக்கெட் இரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆசிய கிரிக்கெட் பேரவை நம்புகிறது.
கிரிக்கெட்டில் உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்திற்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் பார்வைக்கு அமைய 2024 மகளிர் சர்வதேச T20 ஆசியக் கிண்ணப் போட்டி முழுமையாக பெண் கள மத்தியஸ்தர்களையும் பொது மத்தியஸ்தர்களையும் கொண்டிருக்கும்.
இந்த பாரம்பரியம் கடந்த அத்தியாயத்தில் வெற்றி அளித்ததைத் தொடர்ந்து இம்முறையும் அது பின்பற்றப்படவுள்ளது.