முல்லைத்தீவு சிறுமியின் உயிரிழப்பு ; மத்திய சுகாதார அமைச்சும் விசாரணை
முல்லைத்தீவு சிலாவத்தையில் சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு, மத்திய சுகாதார அமைச்சும் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
அதற்கமைய, மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணை குழு ஒன்றை முல்லைத்தீவுக்கு அனுப்ப உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்துள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்தார்.

இந்த நிலையில் மாகாணத்துக்குள் ஆரம்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, விசேட நிபுணர்கள் அறுவர் அடங்கிய குழு நேற்றய தினம் முல்லைதீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறியப்படுத்தாமை தொடர்பில், தெளிவுபடுத்தல் கடிதம் கோரப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார்.
சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் மேற்கொள்ளாமையாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.