உள்ளூராட்சி சட்டங்களில் மறைந்துள்ள அரசியல் திருப்பம் ; பாதீடு பற்றிய விளக்கம்
உள்ளூராட்சி நிறுவனங்களின் பாதீடு தோற்கடிக்கப்படுவதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் பாதீடு அல்ல என்றும் அது மக்களின் பாதீடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தோற்கடிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பாதீட்டில் அடுத்த ஆண்டுக்கான ஏராளமான திட்ட முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு சேவைகளை உகந்த முறையில் வழங்க இந்த பாதீடு தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் இந்த பாதீட்டின் மூலம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏதேனும் ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் இரண்டு தடவைகள் பாதீடு தோற்கடிக்கப்பட்டால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது என துறைசார் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் சட்டங்களின் அடிப்படையில், ஒரு சபையின் தலைவரினால் சமர்ப்பிக்கப்படும் பாதீடானது இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டால், இரண்டாவதாக சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில், அடுத்த நிதியாண்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
எவ்வாறாயினும் ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்றாவது வருடம் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்படும் பட்சத்தில், குறித்த உள்ளூராட்சி சபையின் தலைவர் இயல்பாக பதவியில் இருந்து விலக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.