50-60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே காற்றின் வேகம் அதிகரிப்பதால் அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களும் அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற் பரப்புக்கு எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.