தொலைபேசியில் அச்சுறுத்தல் ;நகை அடவு வைத்து பணம் செலுத்திய பெண்; கணவன் திகைப்பு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்தி பெரயை பயன்படுத்தி தொலைபேசியின் ஊடாக நூதனமான முறையில் அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனம் தெரியாத சிலர் தொலைபேசியின் ஊடாக தங்களை வங்கி ஊழியர்கள் எனவும், பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எனவும் அச்சுறுத்தி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை – அன்புவழி புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொலைபேசிக்கு திங்கட்கிழமை பிற்பகல் 2.40 மணி அளவில் அழைப்பை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.
மர்ம நபர்கள் அச்சுறுத்தல்
தங்களை தனியார் வங்கியின் ஊழியர்கள் என தெரிவித்து உங்களுடைய அடையாள அட்டை தொலைந்திருக்கிறதா என கேட்டுள்ளனர். உங்களுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் 6 இலட்சம் ரூபாய் கடன் பெறபட்டுள்ளதாகவும், அவர்கள் பாதாள உலக கோஷ்டியான செவ்வந்தியுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உங்களை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாகவும் பொலிஸாருடன் கதையுங்கள் எனவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் பொலிஸார் போன்று சிலர் கதைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியை துண்டிக்க விடாமல் உடனடியாக பணத்தை செலுத்துமாறும், இதை யாரிடம் தெரிவித்தால் உங்களுக்குத்தான் ஆபத்து எனவும் கூறியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த குறித்த பெண் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நகைகளை அடகு வைத்து அவர்கள் வழங்கிய மக்கள் வங்கி இலக்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயை வைப்பிலிட்டுள்ளார்.
பின்னர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் வரவே வேலையைவிட்டு வந்த கணவனிடம் குறித்த விடயம் தொடர்பாக கூறியுள்ளார். மர்ம நபர்களுடன் கணவன் கதைத்தபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளார்கள்.
கணவனுக்கு தெரியவந்த உண்மை
குறித்த மர்ம நபர்கள் எப்.சி.ஐ.டி யின் இன்ஸ்பெக்டர் பாலசூரிய மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜரத்னம் ஆகியோரின் பெயர்களில் கதைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பின்னர் குறித்த விடயம் தொடர்பாக திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் செவ்வாய்க்கிழமை (06) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அவர்களுடைய வங்கி கணக்கு விபரங்கள்,தொடர்பு கொண்ட கொழும்பு தொலைபேசி இலக்கங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொடர்ச்சியாக அவர்கள் அழைப்பை எடுத்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வங்கி கணக்கை ஆராய்ந்தபோது அதற்கு 50,000,100,000 என ஒரு நாளைக்கு 5 இலட்சம் தொடக்கம் 1 மில்லியன் வரை வைப்பிலிடப்பட்டு வருவதோடு அது இன்னொரு கணக்கிற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
அத்துடன் குறித்த கணக்கானது மூன்று மாதங்களுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபருடைய பெயரில் இக் கணக்கு இருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.