பசுமை பொருளாதார பாதையில் இலங்கை ; 8 மில்லியன் யூரோ மானியம்
'நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன.
மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்ச, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கிய இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளையும், உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தையும் ஊக்குவிப்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

அத்தோடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, இறப்பர் பயிர்ச்செய்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நேயமான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதும் இதன் இலக்காகும்.
அதன்படி இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜோஹன் எச்.ஹெஸ்ஸும் புதன்கிழமை (07) கைச்சாத்திட்டனர்.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருக்கும் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தினார்.
அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டமானது இலங்கையின் நிலையான வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையவாறு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும்.
பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு, உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப்பாதுகாப்புக்கான நமது பரஸ்பர உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.