பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (Protection of the State Terrorism Act – PSTA) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (04) மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க, எவரிவத்தை நகரில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவரும் அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவரத் தயாராகி வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், நீதிமன்ற அனுமதியின்றிக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைத் தடைசெய்யக்கூடிய சரத்துகள் ஆகியவை இந்தப் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை முடிவடையவுள்ள நிலையில், குறித்த சலுகை இழக்கப்பட்டால் ஆடை உற்பத்தித் துறையில் சுமார் 74,000 வேலைவாய்ப்புகள் ஆபத்தை எதிர்கொள்ளும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.