கொழும்பில் சீன உணவகங்களில் அதிரடி சோதனை ; நீதிமன்றம் அதிரடி அபராதம்
கொழும்பில் இயங்கி வரும் இரண்டு சீன உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை நிறுவனம் ஒன்றுக்கு உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பில் மொத்தம் 4 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சீன உணவகங்களிலும் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்தமை, உரிய லேபிள்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட 120 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக குறித்த உணவகங்களுக்கு மொத்தம் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தரநிலைகளுக்கு இணங்காத ஐஸ்கிரீமை விற்பனை செய்தமை உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு 84 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக மொத்தம் 148 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட உணவகங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.