திலீத், விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு ; ஜனவரி 12ஆம் திகதி முக்கிய தீர்ப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் முக்கிய தீர்ப்பொன்றை வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
குறித்த முறைப்பாட்டில் ஆரம்ப நிலையிலேயே வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முகாந்திரம் உள்ளதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் இன்று (13) தெரிவித்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பான ஆரம்பகட்ட வாதப்பிரதிவாதங்கள் மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தனது சேவை பெறுநர், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, 'ஷானியின் வதைமுகாமில்' தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவே குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக வெளியிட்ட தடுப்புக் காவல் உத்தரவு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே, சலே தொடர்பான விசாரணைகளை சாதாரண சட்டத்தின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என விமல் வீரவங்ச கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த யூடியூப் காணொளிகளில் எதிலும் நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் தொடர்பாக விமல் வீரவங்ச எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சட்டத்தரணி, 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றங்களை அவமதித்தல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என வாதிட்டார்.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காலப்பகுதி தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைப்பது தொடர்பாக, கடந்த ஜூன் 10 மற்றும் ஜூலை 1ஆம் திகதிகளில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படவிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஜூன் 7ஆம் திகதி முதல் ஜூன் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிரதிவாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த குறிப்புகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காணொளிகளின் முழுமையான பதிவுகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் தொடர்பில் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தள அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னரே ஆரம்பகட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கருதி முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதாக வாதிட்டார்.
மற்றுமொரு பிரதிவாதியான திலீத் ஜயவீர சார்பில் முன்னிலையான ஜனாதிபதிச் சட்டத்தரணி அலி சப்ரி, தனது சேவை பெறுநர் தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் வெளியிட்ட கருத்துக்களால் விசாரணை அதிகாரிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் அழுத்தங்கள் ஏற்படுவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே அவர் அவ்வாறான முடிவுக்கு வந்ததாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதன்போது, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் அங்கம் வகிக்கும் நீதியரசர் ஆதித்ய படபெந்திகே, பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பினார்.
சில பிரதிவாதிகள் தாங்கள் நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், 'ஷானியின் வதைமுகாம்' தொடர்பான கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக எவ்வாறு அமையும் என்றும் கேள்வி எழுப்புவதாகச் சுட்டிக்காட்டிய நீதியரசர், இது தொடர்பான சட்டமா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பொலிஸாரோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டார்.
எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை நீதவான் நேரில் பார்வையிடுவது நீதித்துறைச் செயற்பாட்டின் ஒரு பகுதி என அவர் விளக்கமளித்தார்.
இரு தரப்பினரதும் வாய்மொழி வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக எழுத்துமூல சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, திலீத் ஜயவீர, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் ஆரம்பகட்டத்திலேயே வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முகாந்திரம் உள்ளதா என்பது குறித்த தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக அமையவுள்ளது.