உலகளவில் தடைப்பட்ட மைக்ரோசொப்ட் சேவை வழமைக்கு
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்திருந்த மைக்ரோசொப்ட் (Microsoft) சேவைகளின் தொழில்நுட்பத் தடை, தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த சேவைகளில் இடைக்கிடையே சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகளாவிய பயனர்கள் மின்னஞ்சல் சேவைகளுக்குள் நுழைவதிலும், செய்திகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.

சேவைத் தடைகள் குறித்துத் தகவல்களை வெளியிடும் 'Downdetector' இணையத்தளத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்குள் 74 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.
குறிப்பாக, இந்தத் தடை உச்சக்கட்டத்தில் இருந்தபோது 'Outlook' சேவை தொடர்பாக மாத்திரம் சுமார் 140,000 முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களிலுள்ள பயனர்கள் இந்தச் சேவைத் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தமது கட்டமைப்பில் ஏற்பட்ட அதிகப்படியான நெரிசல் (Heavy traffic) காரணமாகவே இவ்வாறான இணைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.