நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ; சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
இந்தியா ஐதராபாத்தில் இருந்து 192 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் நேற்று பகல் 12 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு, சுமார் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் கழிவறைக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த மிரட்டல் குறிப்பு ஒன்றை பணியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதில், பிற்பகல் 1.50 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து விமானி அவசரத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, பகல் 12.58 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த 192 பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.
எனினும், சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், பிற்பகல் 2.30 மணி வரை எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் சென்னை விமான நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.