அனோஜனை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் தீவிரம் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு
சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் ஆரம்பம் முதல் தற்போதுவரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.
அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், அவர் நாட்டுக்கு அழைத்து வரப்படும் திகதி குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், அதற்கான நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சும், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்த விடயத்தில் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது” எனத் தெரிவித்தார்.