நண்பர்கள் இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மரணம்
குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நண்பர்கள் இருவர், மாத்தளை – யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மாத்தளை, யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் முதலாவது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து புத்தர் சிலையில் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய தனியார் துறை ஊழியரான இளைஞரை, பின்னால் வந்த அவரது நண்பர் உடனடியாக முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த நண்பரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியின் பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நண்பர், யட்டவத்தை – எஹட்டுவெவ பகுதியில் எதிரே வந்த கார் ஒன்றுடனும் அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 24 வயதுடைய விசேட அதிரடிப்படை வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், முதலாவது விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பயணத்தில் நண்பர்கள் இருவர் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் மாத்தளை – யட்டவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.