எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க லிட்ரோவின் முன்கூட்டிய நடவடிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாட்டில் நிலவக்கூடிய எரிவாயுத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நோக்கில், 45,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் முன்கூட்டியே கட்டளை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக லிட்ரோ நிறுவனம் 44,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொள்வனவு செய்யக் கட்டளை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் 23,400 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாளை (18) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் எரிவாயுத் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் நோக்கில், வழமையாகச் சந்தைக்கு விநியோகிக்கப்படும் 32,000 மெட்ரிக் டன் எரிவாயுவின் அளவு தற்போது 45,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 10ஆம் திகதி முதல் ஏழு நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 800,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில், முறையான கால அட்டவணைக்கு அமைய பொதுமக்களுக்குத் தேவையான எரிவாயுவைத் தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் உறுதியளித்துள்ளார்.