AI தரவு மையங்கள் தொடர்பில் இலங்கை - கஜகஸ்தான் பேச்சுவார்த்தை
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இலங்கையும் கஜகஸ்தானும் உயர்மட்டப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
இந்த இருதரப்புச் சந்திப்பு நேற்று முன்தினம் (13) டிஜிட்டல் பொருளாதார அமைச்சில், பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது.
இதில், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் GovTech நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹன்ஸ் விஜேசூரிய மற்றும் கஜகஸ்தானின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சின் பிரதம நிபுணர் அசெம் கப்பார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கஜகஸ்தானின் தேசிய செயற்கை நுண்ணறிவு தரவு மையக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, அதன் தரவுக் கொள்ளளவு, நாட்டுக்குள்ளேயே தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வசதி மற்றும் தரவுத் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான நேரடி அரச முதலீட்டு முறைமை ஆகியவை குறித்து ஆராயப்பட்டன.
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதற்குத் தேவையான கொள்ளளவு மதிப்பீடுகள், மின்சாரத் தேவைகள் மற்றும் மூலதன முதலீட்டு அளவுகோல்கள் தொடர்பில் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ள இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.