பூமியில் இருந்தே விண்வெளிப் பயணம் ; இந்தியாவில் திறக்கப்பட்ட அதிநவீன கோளரங்கம்
இந்தியாவின் முதல் LED தொழில்நுட்பத்திலான கோளரங்கம் கர்நாடக மாநிலம் மைசூருவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 115 கோடி இந்திய ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நவீன கோளரங்கத்திற்கு ‘COSMOS’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
விண்வெளி, நட்சத்திரங்கள், கோள்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு அதிசயங்களை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இந்தக் கோளரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சமாக, 15 மீற்றர் விட்டம் கொண்ட பிரம்மாண்டமான குவிமாடத்தில் 6,150 LED திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் ஊடாக 8K தரத்தையும் தாண்டிய அதிநவீன துல்லியத்துடன் விண்வெளிக் காட்சிகளைப் பார்வையிட முடியும்.
பாரம்பரிய கோளரங்கங்களில் பயன்படுத்தப்படும் புரொஜெக்டர் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக, LED திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் தத்ரூபமான காட்சிகளை வழங்குவதே இதன் தனித்துவமாகும்.
மேலும், ஒரே நேரத்தில் 160 பேர் அமர்ந்து விண்வெளி தொடர்பான காட்சிகளைக் காணும் வகையில் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிரபஞ்சம் தொடர்பான அறிவைத் தொழில்நுட்பத்தின் ஊடாக அனுபவப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ள இந்தக் கோளரங்கம் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.