யாழில் சாரதியின் போதையால் தந்தை மகன் பலி; ஏ.எஸ்.பி வழங்கிய உறுதிமொழி
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான சாரதி மதுபோதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த அனைவரும் போதை
சாவகச்சேரி மத்துவில் தெற்கை சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (வயது 51) அவரது மகனான செல்வராஜ் தேசாந்த் (வயது 09) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர் விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் , வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நிலையில் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவே மட்டுவிலை சேர்ந்த 24 வயதுடைய வாகன சாரதியை கைது செய்து , சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் , முதல்கட்டமாக மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறு போதை பொருளையும் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக , விபத்து நடைபெற்ற பகுதியை சேர்ந்தவர்கள் , உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கூடி கோரிக்கை விடுத்திருந்தனர்.
விபத்து இடம்பெற்றவுடன் ,வாகனத்தில் நிறை போதையில் இருந்த சாரதி உள்ளிட்ட நால்வர் தப்பி சென்றதனை தாம் கண்கூடாக கண்டதாகவும், விபத்து நடைபெற்று சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் வாகனத்தை அவ்விடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தி எடுத்து செல்ல முற்பட்டனர்.
அதன் போது , வாகனத்தின் திறப்பை காணவில்லை என தேடிய பொலிசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் , அதன் அடிப்படையில் வாகனத்தினுள் இருந்து "ரிமோர்ட் ஹீ"யை எடுத்து , வாகனத்தை அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்றனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் எவ்வித விசாரணைகளோ இன்றி வாகனத்தை பொலிஸார் ஏன் அப்புறப்படுத்தினர் என பொலிசாரிடம் அங்கு கூடியிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக சில்வா , வாகனத்திற்கு சேதம் விளைவிக்கப்படுவதற்கான ஏது நிலைமை காணப்பட்டமையால் பொலிஸார் வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம்.
தொலைபேசி அடிப்படையில் வாகன திறப்பை பொலிஸார் அடையாளம் கண்டு எடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து , அவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்