தமிழர் பகுதியில் கத்தி முனையில் பணம் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது
திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், ஐஸ் போதைப்பொருளுடன் உப்புவெளி பொலிஸாரால் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உப்புவெளி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 2,130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வீதியால் சென்ற ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி, அவரிடமிருந்து 11,500 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
குறித்த குற்றச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக இரண்டு திறந்த பிடியாணைகளும் (Open Warrants), இரண்டு திகதி குறிப்பிடப்பட்ட பிடியாணைகளும் (Date Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.