ஈழத் தமிழர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட உள்ள வீடுகள் ; சீமான் எதிர்ப்பு
தமிழகத்தின் ஈரோடு பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்பப்பெறப்படும் என Q பிரிவு காவல்துறையினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இந்த வீடுகளைப் பெற்ற ஈழத்தமிழர்கள் தங்கள் வீடுகளின் முன்னால் இருந்த, ஆபத்தான திறந்தவெளி கழிவுநீர் தொட்டியை மூடிவிட்டு, முகப்பு கூரை அமைத்தமையை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கையால், பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழரான அருள்குமார் என்பவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றமை மிகுந்த வேதனையை அளிப்பதாக சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் தொடர்பற்ற வட மாநிலத்தவர்களை நிரந்தரமாய் தமிழகத்தில் தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகள், ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுவதாகவும் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், Q பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க தன்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.