அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; தொடர் அடைமழை
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடைமழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதுடன் கலுல் கொந்தளைப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் இடையறாது பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நீரில் மூழ்கியுள்ள வீட்டுத்திட்டங்கள்
அம்பாறையின் கரையோரப் பிரதேசங்களான அட்டாளைச்சேனை, தைக்கா நகர், அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள சில வீடுகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன். பிரதான வீதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால் சில வீதிகள் ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

