யாழ். சுதுமலை அம்மன் ஆலய நிர்மாணப் பணி வழக்கில் முக்கிய முன்னேற்றம்
சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த ஆலயத்தின் மூலஸ்தானம், கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய கட்டடங்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உரிய கட்டட அனுமதியின்றி ஆலயக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றுமாறு கோரி முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் வி. மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.
ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், கட்டட அனுமதிக்காக ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சம்பந்தப்பட்ட பிரதேச சபையும் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் விளக்கியது.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயக் கட்டடங்களை இடித்து அகற்றுமாறு கோரிய மனு தொடர்பான கட்டளையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வழங்க தீர்மானித்துள்ளது.