அர்ச்சுனாவின் அதிரடி கருத்து ; சுரேஷ் சல்லே கைதால் புலம்பெயர் தமிழர்களுக்கு தீர்வு கிடையாது
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடையப் போவதில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் மக்கள் தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

பலருக்கு போதிய உணவும், குடிநீரும் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பெட்ரோல் விலை 434 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஈரான் தொடர்பான போர் நிலைமைகள் தீவிரமடைந்தால் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கூறினார்.
அத்தகைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் எந்தவொரு முடிவுக்கும் ஆதரவளிக்கத் தயாராக பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
எனினும், நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலை நிரந்தரமானதல்ல எனத் தெரிவித்த அர்ச்சுனா, 2029 ஆம் ஆண்டு வரை மக்கள் இந்தச் சிரமங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கு முன்னரே நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டார்.